ஸலாம் கூறுவதின் சிறப்புகள்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்:
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி),
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236''
இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(நூல்: புகாரி, முஸ்லிம்)
அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுதல்
அல்லாஹ் கூறுகிறான் :"உங்களுக்கு வாழ்த்துக் கூறப் பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்"
(அல்குர்ஆன் 4 : 86)
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்முக்கு செய்ய வேண்டிய கடமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்ம் மற்றொரு முஸ்முக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து ஆகும். அவை ஸலாமுக்குப் பதிலுரைப்பது. நோயாளியை நலம் விசாரிப்பது. ஜனாஷாவை பின் தொடர்வது. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. துமமுபவருக்கு பதிலுரைப்பது ஆகியவை ஆகும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி (1240)
முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹசைன் (ரலி)
நூல் : அபூ தாவூத் (4521)
‘ஸலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -
நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி)
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, 5175
’நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ,அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம், ரியாளுஸ்ஸாலிஹீன் 848
’மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். ’ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி)(ஆதாரம் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 849)
வீடுகளில் நுழையும் முன் ஸலாம் கூறுவதன் அவசியம்: -
அல்லாஹ் கூறுகிறான்: -"நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான்.
- (அல்குர்ஆன் 24 : 61)
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
- (அல்குர்ஆன் 24 : 27)
”மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 861
”நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.”
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (6244)
ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்பவரே சிறந்தவராவார்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முதல் ஸலாம் கூறுபவரே ஆவார்”
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அபூதாவூத் (4522)
”இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ”அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)” என நபி(ஸல்) பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
நூல் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன் 858
''இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் 'ஸலாம்" (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூ அல் அன்ஸாரி (ரலி)
நூல் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூத்
''இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றோர் இறைநம்பிக்கையாளரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து (பேசாமல்) இருப்பது ஆகுமானதல்ல. மூன்று நாட்கள் இப்படிக் கழிந்துவிட்டால் (ஒருவர் மற்றொருவரைச்) சந்தித்து 'ஸலாம்" கூறட்டும். (மற்றொருவர்) பதில் 'ஸலாம்" கூறிவிட்டால், இருவருமே சன்மானத்தில் கூட்டாகி விடுகின்றனர். பதில் 'ஸலாம்" கூறாவிட்டால் (பதில் கூறாதவர்) பாவத்திற்கே திரும்பிவிடுகிறார். ஆரம்பமாக 'ஸலாம்" கூறியவர் (இறைவனுடைய) வெறுப்பை விட்டும் நீங்கி விடுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : அபூ தாவூத்
சந்திக்கும் போது முஸாஃபஹா செய்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”இரண்டு முஸ்ம்கள் சந்தித்து முஸாஃபஹா செய்தால் அவர்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் அவர்களுடைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி) நூல் : திர்மிதி (2651)சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்தித்தல்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” உன்னுடைய சகோதரனைச் சிரித்த முகத்தோடு சந்திப்பது உட்பட நற்காரியங்களில் எதனையும் இழிவாகக் கருதிவிடாதே”
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : முஸ்லிம் (4760)
ஸலாம் கூறுவதின் முறைகள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் , சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் (முதல்) ஸலாம் சொல்லட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (6231)
சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்
அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினார்கள்
நூல் : புகாரி ( 6247 )
அலைக்கஸ் ஸலாம் என்று கூறுவது கூடாது
” நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அலைக்கஸ் ஸலாம் யாரசூலல்லாஹ்” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ” அலைக்கஸ் ஸலாம் ” என்று கூறாதே. ஏனென்றால் ” அலைக்கஸ் ஸலாம் ” என்பது இறந்தவர்களின் ஸலாம் ஆகும் ” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸýலைம் (ரலி)
நூல் : திர்மதி (2646)
யூதர்களைப் போல் ஸலாம் கூறுதல் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் கூறுதலாகிறது (வார்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) மூலமும். சைக்கினையின் மூலமும் ஆகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : அஸ் ஸýனனுல் குப்ரா பாகம் : 6 பக்கம் : 92
தூரத்தில் உள்ளவர்களுக்கு கைகளால் சைக்கினை செய்து மெதுவாக ஸலாம் கூறுதல்
பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாசல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
நூல் : திர்மிதி (2621)
ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூ தாவூத் (4523)
மேற்கண்ட ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனத்திருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1. இஸ்லாத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்.
2. ஒரு முஸ்ம் மற்றொரு முஸ்முக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றும் ஸலாம் கூறுதலாகும்.
3. ஒரு சகோதரரை சிரித்த முகத்துடன் சந்திப்பதும். நற்காரியங்களில் உள்ளதாகும்.
4. முஸாஃபஹா என்பது ஒருவரைச் சந்திக்கும்போது அவருடைய வலது கரம் பற்றுவதாகும். ஒரு கையினால் மட்டுமே முஸாஃபஹா செய்ய வேண்டும். இரு கரம் பற்றிக் குலுக்குவது நபி வழிக்கு மாற்றமானதாகும்.
5. இருவர் சந்திக்கும் போது முதல் ஸலாம் கூறுபவரே இறைவனிடத்தில் நெருக்கத்திற்குரியவராவார்.
6. நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு ஸலாம் கூறுவதினால் கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
7. சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் கூறவேண்டும். ஒரு கூட்டத்தாரின் சார்பாக ஒருவர் மட்டுமே ஸலாம் கூறினால் போதுமானதாகும். ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறப்படும் போது அவர்களின் சார்பாக ஒருவர் மட்டும் பதில் ஸலாம் கூறினால் போதுமானதாகும். பெரியவரும் சிறியவருக்கு ஸலாம் கூறலாம்.
8. ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.
9. ”அஸ்ஸலாமு அலைக்க” என்று கூறுவது கூடாது., இது இறந்தவர்களுக்குரியதாகும்.
10. வார்த்தைகள் இல்லாமல் ஒருவரைச் சந்திக்கும் போது முன்கைகளாலும் தலையைத் தாழ்த்தியும் சைக்கினையின் மூலமும் ஸலாம் கூறக்கூடாது. இது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய கலாச்சாரம் ஆகும்.
11. தூரத்தில் உள்ளவர்களுக்கு ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று வார்த்தைகளைக் கூறி கைகளை அசைத்து ஸலாம் கூறலாம்.
12. ஒருவருக்கு ஸலாம் கூறும் பொழுது அவருக்கு மற்றொரு முறை ஸலாம் கூறலாம். இவ்வாறு மூன்று முறை கூறிக்கொள்ளலாம்.எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!!!
Labels : wallpapers Mobile Games car body design free investmentsystems
0 comments:
Post a Comment