அண்டை வீட்டாருடன்
பெருமதிப்பிற்குரிய எனதருமை சகோதரர்களே நமது வீட்டிற்கு அக்கம் பக்கம் வசித்து வரும் அண்டை வீட்டாருக்கு நம்மால் முடிந்த அளவு நன்மையான விஷயங்களில் உதவிகளை புரிவோம் இன்றைய இயந்திர காலத்தில் அவரவர் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு நகர்புற வாழ்க்கை வாழ்கிறோம் பக்கத்து வீட்டார் யார் எவரென்று தெரிந்து பழக விரும்புவதில்லை திருக்குர்ஆனில் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரை கூறியுள்ளான்:
“மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை”
அண்டை வீட்டாருக்குத் தொல்லைத் தருவது விலக்கப்பட்ட காரியமாகும். காரணம் அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய உரிமைகள் கடமைகள் மகத்தானவை. அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, எவனுடைய தொல்லைகளை விட்டும் அவனுடைய அண்டை வீட்டார் நிம்மதியாக இல்லையோ அவனே!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(புகாரி)
ஒருவர் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொள்கிறார் என்பதற்கு, அவரைப் பற்றி அண்டை வீட்டார் புகழ்ந்துரைப்பதை அல்லது இகழ்ந்துரைப்பதை அளவுகோலாக நபி (ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொண்டேன் என்பதை எப்படி அறிந்து கொள்வது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ நல்ல முறையில் நடந்து கொண்டாய் என உன்னுடைய அண்டை வீட்டார் கூறுவதை நீ செவியேற்றால் நீ நல்ல முறையில் நடந்து கொண்டவனாவாய். நீ தீய முறையில் நடந்து கொண்டாய் என உனது அண்டை வீட்டார் சொல்வதை நீ கேள்விப்பட்டால் நீ தீய முறையில் நடந்து கொண்டவனாவாய்’ என்று கூறினார்கள். (அஹ்மத்)
அண்டை வீட்டாருக்கு தொல்லை தருதல் என்பதற்கு பல முறைகள் உள்ளன. அவற்றுள் சில: அண்டை வீட்டாருடன் இணைந்த பொதுச் சுவரில் ஒரு கட்டையை நடுவதைத் தடுத்தல், சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் அவருக்குத் தடுக்கும் வண்ணம் அவரின் அனுமதியின்றி கட்டிடத்தை உயர்த்திக் கட்டுதல், அவர் வீட்டுக்கு நேராக ஜன்னலைத் திறந்து வைத்து அதன் வழியாக அவருடைய வீட்டின் தனிப்பட்ட விஷயங்களை – நிகழ்ச்சிகளை எட்டிப் பார்த்தல், தட்டுதல், கத்துதல் போன்ற இடையூறு தரும் சப்தங்களால் அவருக்குத் தொல்லை தருதல் – குறிப்பாக தூங்கக்கூடிய மற்றும் ஓய்வெடுக்கக்கூடிய நேரங்களில், அல்லது அவருடைய குழந்தையை அடித்தல், அவருடைய வாசலில் குப்பையை வீசுதல் போன்றவற்றால் அவருக்குத் தொல்லைகள் தருதல்.
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.புஹாரி :6014
அக்கம்பக்கம் இருக்கும் பெண்களுக்குள் சண்டை சச்சரவு வந்துவிட்டால் இருதரப்பினரும் கொச்ச வார்த்தைகளினால் திட்டிக்கொள்வார்கள் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உனதுவீட்டு கல்யாணத்துலே எவ்வளவோ மொய் வைத்துள்ளேன் என்று சொல்லிக்காட்ட மறுதரப்பு உன்னோட பிச்சக்காரகாசு எனக்கெதுக்கு என்று சொல்லி மொய் பணத்தையும் திருப்பிக்கொடுத்த சம்பவமும் உண்டு.
முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் : புகாரி)
அபூதரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவணித்துக் கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் :முஸ்லிம்)
“முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக நினைத்துக் கொடுக்காமல் இருக்க வேண்டாம். சிறதளவு இறைச்சி ஒட்டிக்கொண்டிருக்கும் எலும்புத்துண்டாயினும் சரியே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
சில வீடுகளில் அண்டை வீட்டாருக்கான வேலியின் அளவு கூடகுறைய இருந்தாலும் அதுக்காக கோர்ட் கேசுயென அலைந்துக்கொண்டிருப்பார்கள் விசாரித்தால் அல்ப்பத்திலும் அல்ப்ப விஷயமாக இருக்கும் ஆனால் இடத்துக்கான மதிப்பைவிட அதிகம் சிலவு செய்தாலும் பரவாயில்லை விட்டுக்கொடுக்க முடியாதுயென அடம் பிடிப்பவர்களை பார்க்கிறோம்.
அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அபூ ஸலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக் கொள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' எனக் கூறினார்கள்" என்றார்கள்.
அண்டை வீட்டாரை நேசிப்பது கடமை
நபி (ஸல்) கூறினார்கள்:- எவரொருவர் அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டிருப்பாரோ அவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தவும், மேலும் எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டிருப்பாரோ அவர் தமது அண்டை வீட்டாரை துன்புறுத்தாமல் இருக்கவும், இன்னும் அவர் அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டிருப்பாரோ அவர் பேசுவதாயின் நல்லதையே பேசட்டும்! இல்லையேல் மெளனமாக இருந்து விடவும்! வேறெரு அறிவிப்பில் அவர் இரத்த பந்த உறவை ஆதரித்து நடக்கட்டும்! அறி: அபூஹுரைரா (ரலி) நூல்: மிஷ்காத்
மேற்கூறப்பட்ட நபி மொழியில் விருந்தினர் உபசரிப்பதும், அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தும்படி எடுத்தியம்புகிறது. அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு பற்ற வேண்டும். நோய் வாய்ப்புற்றால் சென்று பார்க்க வேண்டும். உணவுகள் சமைத்தால் அதனைத் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள்: அண்டை வீட்டாரின் மீது என்ன கடமை இருக்கிறது என்பதை அறிவீர்களா? அவர் உம்மிடம் உதவி தேடினால் அவருக்கு உதவி செய்க.
அவர் கடன் கேட்டால் அவருக்கு கடனைக் கொடுக்கவும், அவர் தேவைப்பட்டவராக இருப்பின் அவருக்கு ஒத்தாசை புரிக! அவர் நோய் வாய்ப்பட்டால் அவரை நோய் விசாரிக்க செல்லுக! அவர் இறந்துவிட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்லுக! மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடைபெற்றால் அவருக்கு நல் வாழ்த்து கூறுக! ஒரு கால் துன்பம் விளைந்துவிட்டால் அவரை தேற்றுக. அவரது அனுமதி பெறாது அவருடைய வீட்டைக் காட்டிலும் உமது வீட்டை உயர்த்திக் கட்டாதீர்.
அதனால் அவருக்கு காற்று தடைபட்டுப் போகும். ஏதேனும் பழம் வாங்கினால் நீர் அவருக்கும் அதனை வெகுமதியாகக் கொடுத்து அனுப்புக!
அது உம்மால் முடியாமல் போனால் அப்பழத்தை அவர் பார்க்காத முறையிலும் உம்முடைய குழந்தைகள் வெளியே கொண்டு செல்லாமல் இருக்கும் முறையிலும் அதனை மறைவாக வீட்டிற்கு எடுத்துச் செல்லுக! இதனால் அண்டை வீட்டுப்பிள்ளைகள் அதனைக் கண்டு ஏங்கக் கூடாது. இன்னும் உமது வீட்டுப் புகையினால் அவருக்கு துன்பம் சேர்க்காதீர்.
அது தவிர்க்க முடியாதென்றால் எது சமைக்கப்பட்டதோ அதில் அவருக்கு ஒரு பங்கை நிர்ணயித்து கொடுத்து அனுப்புக. எவனுடைய கைவசம் எனது உயிர் இருக்கிறதோ அந்த பரிசுத்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அண்டை வீட்டாரின் கடமையை அல்லாஹ் எவர் மீது கிருபை செய்தானோ அவரைத் தவிர்த்து வேறுயாரும் அறியமாட்டார். (இமாம் கஸ்ஸாலி)
அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: நீங்கள் அல்லாஹ்வின் வணக்கத்தை மேற்கொள்ளுங்கள், அவனுடன் எவ்வஸ்துவையும் இணையாக்க வேண்டாம். தமது பெற்றோர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளவும். அவ்வாறே குடும்பத்தார் உறவினருடனும், அநாதைகளுடனும், ஏழை, எளியோர்களுடனும் மேலும் தனது அருகில் வசிக்கும் அண்டை வீட்டாருடனும், தூரத்தில் வசிக்கும் அண்டை வீட்டார்களுடனும், உங்களுடன் இருக்கும் நண்பர்களுடனும், மேலும் வழிப்போக்கர்களுடனும் அவ்வாறு நடந்து கொள்ளவும். ஸ¤ரா. அந்நிஸா:6
ஹல்ரத் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் அண்டை வீடு எதுவரை உள்ளது? என விசாரித்தார். அதற்கு அவர்கள் நாற்பது வீடுகள் முன்பாக, நாற்பது வீடுகள் பின்பக்கமாக, நாற்பது வலது புறம், நாற்பது இடது புறம்” என பதிலளிதார்கள்.
அன்னை அயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “எனக்கு இரு அண்டை வீட்டார் இருக்கின்றனர். நான் ஏதேனும் அன்பளிப்பு அனுப்புவதாய் இருந்தால் அவ்விருவரில் எவரிலிருந்து ஆரம்பம் செய்வது? எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் எவருடைய தலைவாசல் உனது தலைவாசலுக்கு சமீபத்திலுள்ளதோ அவரிலிருந்து என அருளினார்கள்.
அண்டை அயலான் பசித்திருக்க உண்டு விலாப்புடைப்பவன் விசுவாஷியல்ல. என நபி (ஸல்) கூறியிருப்பதில் பெரிய தத்துவம் உள்ளது. எனவே நாமும் அண்டை அயலாருடன் அன்புடனும், ஒற்றுமையுடனும் வாழப்பழகிக் கொள்வோமாக.
முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் பிரத்தியேக உபகாரம் செய்வார்
முஸ்லிம் தனது அருகிலிருக்கும் முஸ்லிம் குடும்பத்திற்கு உபகாரம் செய்வதுடன் தனது உபகாரத்தை நிறுத்திக் கொள்ளாமல் முஸ்லிமல்லாத குடும்பத்துக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாமின் மாண்புகள் உலகளாவியது. அது மத, வேறுபாடின்றி உலகின் அனைவரையும் தனது நற்செயல்களால் சூழ்ந்து கொள்ளும் தன்மை பெற்றது.
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கப்படும்போது தனது அடிமையிடம், "நமது அண்டை வீட்டாரான யூதருக்கு (ஆட்டிறைச்சியை) அன்பளிப்புச் செய்தாயா? நமது அண்டை வீட்டாரான யூதருக்கு அன்பளிப்புச் செய்து விட்டாயா?'' என (இருமுறை) கேட்பார்கள். "ஏனெனில் நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: "ஜிப்ரீல் எனக்கு அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு வாரிசுரிமையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று நான் எண்ணுமளவு (உபதேசித்தார்கள்)'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
தற்காலத்திலும் எத்தனையோ முஸ்லிமல்லாத வேதக்காரர்கள் முஸ்லிம்களுக்கு அருகில் அவர்கள் உயிர், பொருள், கொள்கை, கெªரவம் காக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் நகரங்களில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமது ஆலயங்களை அமைத்து கொண்டு நிம்மதியாக வாழ்வது இதற்குச் சான்றாகும். குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கற்பித்த நெறியின்படி பிற மதத்தவர் பாதுகாப்பும், உதவியும், உபகாரமும் பெற்று நிம்மதியாக வாழ்கின்றனர்.
விசுவாசிகளே! மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர் களுக்கும் நீங்கள் நன்றி செய்ய வேண்டாமென்றும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளக் கூடாதென்றும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்அன் 60:8)
அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டாரில் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்களின் இந்த மேன்மையான வழிகாட்டுதலை நபித்தோழர்கள் பின்பற்றினார்கள். இது குறித்து அபூஹுரைரா (ரழி) கூறினார்கள்: "தனது அண்டை வீட்டாரில் அருகிலிருப்பவரை விட தூரத்திலிருப்பவருக்கு முன்னுரிமையளிக்க வேண்டாம். முதலில் நெருங்கி இருப்பவருக்கும், அடுத்து தூரத்திலிருப்பவருக்கும் உபகாரத்தைச் செய்ய வேண்டும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வது பற்றிய இவ்வரிசை முறை முஸ்லிமை தனது தூரமான அண்டை வீட்டாரை கவனிப்பதிலிருந்து முகத்தைத் திருப்பிவிடாது. அவரது வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அண்டை வீட்டார் என்ற உரிமையைப் பெறுவார்கள். முஸ்லிம், அவர்களுக்கு உபகாரம் செய்ய கடமைபட்டிருக்கிறார். நெருங்கிய அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்பது மனித இயல்பை கவனித்து அமைக்கப்பட்டதாகும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக நெருங்கிய அண்டை வீட்டாரின் மனநிலையைக் கவனித்தார்கள்.
சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ்வார்
அண்டை வீட்டாருக்கு உதவியும், உபகாரமும் செய்வது முஸ்லிமின் இயல்போடு ஒன்றிவிட்ட ஒர் உணர்வாகும். இது அல்லாஹ்விடமும் மனிதர்களிடமும் அவருக்குரிய சிறப்புத் தன்மையாகும். ஏனெனில், அவர் இஸ்லாமிய அமுதத்தை அருந்தியவர். அவரது இதயம் இஸ்லாமின் மேன்மையான பயிற்சியினால் மலர்ந்திருக்கும். இந்நிலையில் அவர் சிறந்த தோழராக, சிறந்த அண்டை வீட்டாராகவே திகழ்வார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே. அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.'' (ஸன்னனுத் திர்மிதி)
சிறந்த அண்டை வீட்டார் அமைவதும் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம் போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.'' (முஸ்னத் அஹமத்)
நமது முன்னோர்கள் நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருதினார்கள். ஸயீது பின் அஸ் (ரழி) அவர்களின் அண்டை வீட்டுக்காரர் தனது வீட்டை ஒரு இலட்சம் திர்ஹத்துக்கு விலை பேசினார். அதை வாங்குபவரிடம் "இது இந்த வீட்டின் விலையாகும். ஆனால், ஸயீது (ரழி) அவர்களின் பக்கத்து வீடு என்ற சிறப்புத் தன்மையை அடைந்து கொள்ள எவ்வளவு கொடுப்பாய்?'' என்று கேட்டார். இதையறிந்த ஸயீது (ரழி) அந்த வீட்டுக்காரருக்கு ஒர் இலட்சம் திர்ஹத்தை அனுப்பி அவரையே குடியிருக்கச் செய்தார்கள்.
இதுவரை நல்ல அண்டைவீட்டார் சம்பந்தப்பட்ட அழகிய உபதேசங்களைக் கண்டோம். இதோ இப்போது கெட்ட அண்டை வீட்டார் பற்றிய விஷயங்களைக் காண்போம்.
தீய அண்டை வீட்டானும் அவனது கருப்புப் பக்கமும்
தீய அண்டை வீட்டான் இவ்வுலக வாழ்வின் பாக்கியங்களில் ஈமான் என்ற மிகச் சிறந்த பாக்கியத்தை இழந்தவனாவான். இதை நபி(ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே அவர் யார்?'' என வினவினர். நபி (ஸல்) அவர்கள் "எவருடைய தீங்குகளிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதி பெறவில்லையோ அவர்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதியடைய மாட்டார்களோ அவர் சுவனம் புகமாட்டார்.''
இது எவ்வளவு பெரிய பாவம்? தனது அண்டை வீட்டாரிடம் தீய முறையில் நடந்து கொள்பவர் எவ்வளவு பெரிய அருட்கொடையை இழந்துவிட்டார்? "ஈமான்' என்ற மகத்தான அருட்கொடை அவரிடமிருந்து நீங்கி விடுகிறது. சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் இழந்து ஈடு செய்ய முடியாத நஷ்டத்தில் வீழ்ந்து விடுகிறார்.
உண்மை முஸ்லிம் திறந்த மனதுடன் மேற்கண்ட சான்றுகளைப் புரிந்துகொண்டு தனது அண்டை வீட்டாரிடம் எந்த நிலையிலும் சண்டை, சச்சரவு இல்லாமல் அவர்களைத் துன்புறுத்திவிடாத வகையில் செயல்படுவார். அவ்வாறு இல்லையென்றால் அவருடைய ஈமான் பறி போய்விடும்; மறுமை வாழ்வில் தோல்வியடைந்து விடுவார். இதைவிட பெரிய துரதிஷ்டம் என்னவாக இருக்க முடியும்? அதை நினைத்தாலே அவரது உடல் நடுங்கி இயம் திடுக்கிட்டுவிடும்.
தீய அண்டை வீட்டானின் நற்செயல்கள் அழிந்து விடும்
தீய குணமுடைய அண்டை வீட்டாரின் நற்செயல்கள் அழிக்கப்பட்டு விடும். அண்டை வீட்டாருக்கு நோவினையளிப்பவரின் நற்கருமங்களுக்கு எப்பலனுமில்லை. ஏனெனில் நற்செயல்கள் அனைத்தும் ஈமான் என்ற தூணின் மீதுதான் நிர்மாணிக்கப்படுகிறது. மேற்கண்ட சான்றுகள் அவனுக்கு ஈமான் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஈமானற்றவனின் எந்த நற்செயலையும் அல்லாஹ் ஒப்புக்கொள்ளாமல் அழித்துவிடுவான் என்பது மிகத் தெளிவான விஷயமாகும். அந்த நற்செயல்களுக்காக அவன் வாழ்வனைத்தையும் செலவிட்டிருந்தாலும் சரியே.
நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண்மணி இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகலில் நோன்பு நோற்கிறார். தர்மமும் செய்கிறார். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்கு நோவினையளிக்கிறார்.'' நபி (ஸல்) அவர்கள், "அவளிடத்தில் எந்த நன்மையுமில்லை, அவள் நரகவாதி'' என்றார்கள். நபித்தோழர்கள், "இன்ன பெண்மணி ஃபர்ளான தொழுகையை மட்டும் தொழுகிறாள். பாலாடைக் கட்டியை (மட்டும்) தர்மம் செய்கிறாள்; ஆனால் எவருக்கும் நோவினையளிப்பதில்லை'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவள் சுவனவாசி'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
தீய குணமுடைய அண்டை வீட்டானை "மலடன்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று நபர்கள் மலடர்களாவர். 1) ஒரு தலைவன். நீ அவனுக்கு நன்மை செய்தால் நன்றி செலுத்தமாட்டான்; (அந்த நன்மைக்குப் பிரதிபலனை அவனிடம் எதிர்பார்க்க முடியாது.) நீ தீங்கிழைத்தால் மன்னிக்கமாட்டான் 2) தீய குணமுடைய அண்டை வீட்டான். உன்னிடம் நன்மையைக் கண்டால் மறைத்து விடுவான்; தீமையைக் கண்டால் பகிரங்கப்படுத்துவான் 3) மனைவி, நீ இருக்கும்போது உனக்கு நோவினையளிப்பாள். நீ அவளிடம் இல்லாதபோது உமக்கு மோசம் செய்வாள்.'' (முஃஜமுத் தப்ரானி)
இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விவரித்தது போன்று கெட்ட அண்டை வீட்டாரின் அருவருப்பான உருவம் இறையச்சமுள்ள முஸ்லிமின் சிந்தனையில் தோன்றியிருக்கும். எனவே அவர் தனது அண்டை வீட்டாருக்கு தீமை செய்வதிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார்.
அண்டை வீட்டாரிடம் முறைகேடாக நடக்க மாட்டார்
முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன் மிகக் கவனமாக விலகிக் கொள்வார். எனெனில் அது பெரும் பாவமாகும். ஆதை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி தெளிவுபடுத்துகிறது. நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் விபச்சாரத்தைப் பற்றி வினவினார்கள். தோழர்கள் "ஹராம்; அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியுள்ளார்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ""ஒரு மனிதன் தனது அண்டை வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதைவிட பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது பாவத்தால் இலகுவானதாகும்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் திருட்டைப் பற்றி கேட்டார்கள். தோழர்கள் "அது ஹராம். அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஹராமாக்கியுள்ளார்கள்'' என்று கூறினார்கள். அப்போது ""ஒருவன் தனது அண்டை வீட்டில் திருடுவதைவிட வேறு பத்து வீடுகளில் திருடுவது பாவத்தால் இலகுவானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹமத்)
இஸ்லாம் அண்டை வீட்டாருக்கு கெªரவமான அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதை மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களாலும் அவர்களது பண்பாட்டு நெறிகளாலும் அறிந்துகொள்ள முடியாது. மாறாக இச்சட்டங்கள் அண்டை வீட்டாரின் கண்ணியத்தையும் கெªரவத்தையும் மதிக்காமல் வீணடிக்கின்றன. ஆம்! பெரும்பாலும் இவர்கள் அண்டை வீட்டாரின் கெªரவத்தில் விளையாடுவதை மிக இலேசாகக் கருதுகிறார்கள். அதை நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நமது இஸ்லாமின் நற்பண்புகள் நம்மை விட்டு விலகியபோது ஆபாசப் பாடல்கள் நம்மில் பரவ ஆரம்பித்தன. அதில் அண்டை வீட்டாரின் ஜன்னல் காட்சிகளைச் சித்தரிக்கிறார்கள். அது மட்டுமா? கலாச்சார ரீதியாகவும் இவர்களின் கொள்கைப் போரின் அலைகள் நம்மைச் சூழ ஆரம்பித்துவிட்டன.
இதோ வெட்கம் கெட்ட ஒரு அற்பத்தனமான வாலிபன் தனது அண்டை வீட்டுப் பெண்ணை பாட்டில் அமைத்து காதல் தூது விடுகிறான். சீ! இப்படிப்பட்ட அசிங்கத்தை இஸ்லாமுக்கு முந்திய அறியாமைக் காலத்தில் கூட நாம் காணவில்லை. அப்படியிருக்க இஸ்லாமில் அதை எப்படிப் பார்க்க முடியும்?
அண்டை வீட்டாரின் கண்ணியத்தைக் காப்பது, அவரது கெªரவத்தைப் பேணுவது, அவருக்கு உதவிகள் புரிவது மற்றும் அவரது குறைகளை மறைப்பது, தேவைகளை நிறைவேற்றுவது, அவரது குடும்பப் பெண்கள் விஷயத்தில் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது, அவருக்குத் தீங்கிழைப்பதிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தும் பல சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் மனித சமூகத்தில் மிகச்சிறந்த அண்டை வீட்டுக்காரராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
எனெனில், அவர் திறந்த மனதுடையவராக, சமூகத்தில் அண்டை வீட்டாரின் நிலை குறித்த இஸ்லாமின் கண்ணோட்டத்தை அறிந்தவராக இருப்பார். தனக்கும் அவருக்குமிடையே ஏதேனும் பிரச்சனைகள் தோன்றினால் அதில் ஈடுபடுவதற்கு முன் பலமுறை யோசிப்பார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முதன் முதலாக தர்க்கம் செய்து கொள்ளும் இருவர் அண்டை வீட்டார்கள்தான்.'' (முஸ்னத் அஹமத்)
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் தாராளத்தைக் கடைபிடிப்பார்
இஸ்லாமின் மாண்புகளைப் புரிந்த முஸ்லிம் தனது அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் மிக தாராளமாக நடந்து கொள்வார். அவருக்கு உபகாரத்தின் கதவுகளைத் திறந்து, தீமையின் வாயில்களை மூடிவிடுவார். அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு எற்படுவதை அஞ்சிக் கொள்வார்.
நன்றியற்ற அண்டை வீட்டார்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். "இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார்; அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்'' என்று கூறுவார். (அல் அதபுல் முஃப்ரத்)
இந்நிலையைச் சந்திப்பது எவ்வளவு பெரிய துரதிஷ்டம்? எல்லோருக்கும் முன்பாக மறுமையில் தனது கஞ்சத்தனத்தால் வெட்கித் தலைகுனிய வேண்டுமே! இஸ்லாமியப் பார்வையில் முஸ்லிம்கள் உறுதியாக கட்டப்பட்ட கட்டிடமாவார்கள். இந்த உம்மத்தினர்தான் அதன் கற்கள். ஒவ்வொரு கல்லும் ஒன்றோடொன்று சமமானதாக மற்றோர் கல்லுடன் உறுதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்டிடம் உறுதியானதாகத் திகழும். இல்லையென்றால் அக்கட்டிடம் பலவீனப்பட்டுவிடும்.
இவ்விடத்தில் இஸ்லாம் தனது உறுப்பினரிடையே உயிரோட்டமான இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இஸ்லாம் என்ற அக்கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்கிறது. கால ஒட்டங்களில் ஏற்படும் அதிர்ச்சிகளும், சோதனைகளும் அக்கட்டிடத்தை அசைத்துவிட முடியாது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி மிகச் சிறந்த உதாரணம் ஒன்றைக் கூறினார்கள்:
"ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு உதாரணம் ஒரு கட்டிடத்தைப் போன்றதாகும். அதில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: "முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணைகொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது, ஒர் உடலைப் போன்றதாகும். அதில் எதேனும் ஒர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலைக் கொண்டும் தூக்கமின்மையைக் கொண்டும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஈமான் எனும் இந்த அற்புதமான இணைப்பின் மூலம் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இணைப்பதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது. அதில் ஒர் அங்கமே அண்டை வீட்டினருடன் உறுதியான உறவை எற்படுத்தியதாகும்.
அண்டை வீட்டாரின் இடையூறுகளை சகித்துக் கொள்வார்
மாண்புமிக்க மார்க்கத்தால் பிரகாசமான நேர்வழியைப் பெற்றுள்ள முஸ்லிம், தனது அண்டை வீட்டாரின் நடவடிக்கைகளில் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். எதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் அது விஷயத்தில் கோபம் கொள்ளாமல் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்கில் அக்குறைகளை மறந்து மன்னித்துவிட வேண்டும். இவ்வாறு மன்னிப்பது என்ற நற்செயலை அல்லாஹ் வீணடித்துவிட மாட்டான்; அது அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுத்தரும் என்பதை உறுதி கொள்ள வேண்டும்.
இற்குச் சான்றாக அபூதர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நீண்ட ஒரு பொன்மொழியை அறிவிக்கிறார்கள். அதில் வருவதாவது "மூன்று நபர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்களில் ஒருவர் தனது கெட்ட அண்டை வீட்டாரின் நோவினையை சகித்து வாழ்பவர்.''(முஸ்னத் அஹமத், முஃஜமுத் தப்ரானி)
அண்டை வீட்டார் செய்த தீமைக்கு பழிவாங்கமாட்டார்
நபி (ஸல்) கற்றுத்தந்த நற்பண்புகளில் ஒன்று அண்டை வீட்டாரின் தீமைக்கு பழிவாங்காமல் முடிந்த அளவு பொறுமைகாக்க வேண்டும் என்பதாகும். தான் இடையூறு செய்தும் தனது அண்டை வீட்டார் எவ்வித எதிர்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தீமைபுரிபவர் உணர்ந்து கொண்டால் மனம்மாறி தவறுகளிலிருந்து திருந்துவதற்கான வாய்ப்பு எற்படும். எனவே பொறுமையுடனும் நிதானத்துடனும் அதை எதிர்கொள்ள வேண்டும். இதுவே ஒழுக்கப் பயிற்சிக்கான சிறந்த வழிமுறையாகும்.
முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்: "(அல்லாஹ்வின் தூதரே!) எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு துன்பமிழைக்கிறார்'' நபி (ஸல்) அவர்கள் "பொறுமையாக இரு'' என்றார்கள். அவர் மீண்டும் வந்து கூறினார்: "எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார்.'' நபி (ஸல்) அவர்கள்: "பொறுமையாக இரு'' என்று கூறினார்கள். அவர் மீண்டும் மூன்றாவது முறையாக கூறினார்: "எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினையளிக்கிறார்.'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(வீட்டிலுள்ள) உமது சாமான்களை எடுத்து வீதியிலே வைத்துவிடு. உம்மிடம் எவரேனும் வந்து காரணத்தை விசாரித்தால் என்னுடைய அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார் என்று கூறும். (மக்கள் அனைவரும் அவனை ஏசுவார்கள்; அதனால்) அவர் மீது அல்லாஹ்வின் சாபம் எற்பட்டுவிடும். எவர் அல்லாஹவையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டுக்காரரைக் கண்ணியப்படுத்தட்டும்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)
அண்டை வீட்டாரின் உரிமைகளை அறிவார்
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் ஒவ்வொரு நிலையிலும் தான் அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முஸ்லிம் அறிந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் சிரமப்படும்போது அவர்களுக்கு உதவுதல், அவரது வளமையில் மகிழ்வது, அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களில் தானும் மகிழ்ந்திருத்தல், தேவைப்பட்ட உதவிகளைச் செய்வது மற்றும் அவர் நோய்வாய்ப்பட்டால் நலன் விசாரித்து அறுதல் கூறி உற்சாகப்படுத்துவது போன்ற நற்குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், அண்டை வீட்டார் மரணித்தால் மையித்துக்கான கடமைகளை நிறைவேற்றி அவருக்குப் பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும். அண்டை வீட்டாரின் உணர்வுகளை, அவரது குடும்பத்தாரின் உணர்வுகளை மதிப்பதில் ஒருபோதும் தவறிழைத்துவிடக் கூடாது. இந்நிலையில் ஒரு முஃமின் தனது அண்டை வீட்டாருக்கு இடையூறு செய்வதென்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயமாகும்.
இதுதான் அண்டை வீட்டார் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமாகும். இந்த உன்னதமான பண்புகளைக் கற்றுத் தேர்ந்த முஸ்லிமே இஸ்லாமின் கோட்பாடுகளைப் புரிந்தவராவார். அந்தப் பிரகாசமான நேர்வழியை அடைந்து, தன்னையும் தனது குடும்பத்தினரையும் இஸ்லாமிய சட்டங்களோடு பொருத்திக் கொள்வார். இந்நிலையில் உண்மை முஸ்லிம், மனித சமுதாயத்தில் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?